×

ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள் இ-பாஸ் பெறுவது எப்படி..? தமிழக அரசு தகவல்

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வாகன நெரிசலை கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களின் எண்களையும், வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளம் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ‌ பா‌ஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அவர்கள் வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து இன்று காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இமெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும். இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையை நாளை (7ம் தேதி) முதல் ஜூன் 30ம் தேதி வரை பின்பற்றுவார்கள். இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.

The post ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள் இ-பாஸ் பெறுவது எப்படி..? தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kodaikanal ,Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu ,India ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...